கேள்வி
“இளம் பருவத்தினர் பற்பல தீய பழக்கத்திற்கு  அடிமையாகாமல் தடுப்பது எப்படி”

விடை
எல்லா பெற்றோரும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம், எல்லாப் பிள்ளைகளும் மனதின் கேள்விகளுக்கு விடைதேடித்தான் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள்.

பிள்ளைகள் பிறக்கும் போது மனம் இருக்காது, பிள்ளைகள் வளர வளர மனமும் சேர்ந்து வளர்கிறது. மனம் வளர ஆரம்பித்தவுடன் பிள்ளைகள் கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

கேள்விகள் கேட்டு கற்றுக்கொள்ளும் பிள்ளைகள் ஒரு கால கட்டத்தில் செய்து பார்த்து அறிந்துகொள்ளா விழைகிறார்கள். பிள்ளைகளின் அறிந்து கொள்ளும் ஆர்வத்தின் ஒரு பக்க விழைவுதான் தீய பழக்கங்கள்.

பிள்ளைகள் தீய பழக்கத்திற்கு  அடிமையாகாமல் இருக்கத் தீர்வு
பிள்ளைகளுக்கு அதிகமாக அறிவுரைகள் சொல்வதை முதலில் நிருத்த வேண்டும். பிள்ளைகள் பெற்றோர் சொல்வதைக் கேட்டு வளர்வதில்லை, அவர்கள் செய்வதை பார்த்துத்தான் வளர்கிறார்கள்.

– பிள்ளைகள் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டுங்கள். அப்படி வாழ்பவர்களின் பழக்கத்தை, நட்பை ஏற்படுத்துங்கள்.

– பிள்ளைகளிடம் அன்பாகவும் நட்புடனும் பழகுங்கள். தினமும் அவர்களுடன் பேசுங்கள், தினம் பள்ளியில் நடந்த விசயங்களைப் பற்றி பேசுங்கள்.

– அன்பு காட்டுவதாக நினைத்து செல்லம் கொடுத்துக் கெடுத்து விடாதீர்கள். அன்பு காட்டுவதிலும் ஒரு அளவோடு இருந்துகொள்ளுங்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.

– உங்கள் வாழ்க்கையின் கஷ்டங்களின் தழும்புகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள், ஆனால் உங்கள் வாழ்க்கையின் வேதனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

– சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் வருவது உண்மையல்ல, வெறும் நடிப்பு என்று சிறுவயது முதலே புரிய வையுங்கள். சினிமா பைத்தியமாக மாறாமல் பிள்ளைகளைப் பாதுகாத்து கொள்ளுங்கள்.

– படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். நீங்கள் முதலில் படிக்க வேண்டும், நீங்கள் படித்தால்தான், உங்களைப் பார்த்து பிள்ளைகள் படிப்பார்கள்

– உங்கள் பிள்ளைகளுடன், குடும்பத்துடன் நேரத்தைச் செலவழியுங்கள். ஒன்றாக இரவு உணவு உண்பது, குடும்பத்துடன் படம் பார்க்கச் செல்வது. கடற்கரைக்கு, பூங்காக்களுக்குச் செல்வது, உறவினர்கள் வீட்டுக்குச் செல்வது போன்ற பழக்கங்களை ஏற்படுத்துங்கள்.

– குடும்பத்துடன் அன்னோனியமாக இருக்கும் பிள்ளைகள் 80 % தீய பழக்கங்களுக்கு ஆலாவதில்லை.

– குடும்பத்தையும் குடும்பத்தினரின் அன்பையும் இழந்த பிள்ளைகள் தான் அதிக அளவில் தீய பழக்கங்களுக்கு ஆலாகின்றனர்.

மனோதத்துவ தீர்வு
– நெல் விவசாய நிலங்களில் எந்த வயலுக்கு நீரோட்டத்தைத் தடுக்க வேண்டுமோ, அந்த வரப்பை அடைத்து.  எந்த வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டுமோ அதுக்கு ஏத்தார் போல் அந்த வரப்பை வெட்டி விடுவார்கள்.

– அதைப் போல் உங்கள் பிள்ளைகளின் தீய செயல்களுக்கு எது காரணமாக இருக்கிறது என்று கவனித்து, அதைத் தடுத்து. உங்கள் பிள்ளைகள் எப்படி வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அதுக்கு ஏத்தாற்போல் அவர்களின் தினசரி வாழ்க்கையை மாற்றுங்கள்.

– புதிய பொழுது போக்கு அல்லது விளையாட்டுகளில் ஈடுபடத் தூண்டி விடுங்கள். அவர்களின் சிந்தனையை மாற்றுங்கள்

முழுமையான தீர்வு
– இளம் பிள்ளைகளின் தீய பழக்கங்களுக்கு முழுமையான தீர்வு, அவர்களின் சிந்தனையை அவர்களின் தேடுதலை மாற்றிவிடுவது மட்டுமே. அறிவுரைகள் சொல்லி யாரையும் திருத்த முடியாது.

– படிக்கும் பழக்கமும், குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும், நல்ல மனிதர்களின் பழக்கமும், நட்பும் மற்றும் புதிய நல்ல பொழுது போக்கும் விளையாட்டுகளுமே நிரந்தரமான ஒரு தீர்வை தரும்.

ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்