வயிற்றின் உள்ளே செல்லும் அனைத்து உணவும் முறையாகச் செரிமானமாகி, சக்திகளை உடல் பிரித்து எடுத்தபின் மீதம் இருப்பதை, கழிவாக வெளியேற்ற வேண்டும். இது இயற்கையின் நியதி. ஆனால் பலருக்கு இது முறையாக நடப்பதில்லை.

செரிமான கோளாறும், மலச்சிக்கலும் சுடுகாட்டுத் தேரின் இரு சக்கரங்கள் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்.

செரிமானம் குறைபாடுதான் மனிதர்கள் அனுபவிக்கும் எல்லா நோய்களுக்கும் எல்லாத் தொந்தரவுகளுக்கும் முதல் காரணமாக இருக்கிறது. அடுத்ததாக மலச்சிக்கல். செரிமான கோளாறுகள் பற்றி அன்று பார்த்தோம். மலச்சிக்கல் பற்றி இப்போது பார்ப்போம்.

மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படுவது ஏன்?
மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டு, முறையாக மலம் கழிக்க முடியாமல் பலர் அவதியுறுகின்றனர். மலச்சிக்கலில் பல வகை உண்டு. அவற்றில் சில…

1. சிலருக்கு “எப்ப வரும் எப்படி வரும் என்று தெரியாது, ஆனால் கண்ட நேரத்தில் வரும், வந்தாலும் தடுக்க முடியாது வராவிட்டாலும் ஏன் என்று கேட்க முடியாது”.

2. சிலருக்கு “வரும் ஆனால் வராது”

3. சிலருக்கு “வந்திரு வந்திரு தானா வந்திரு என்று கெஞ்ச வேண்டியது வரும்”

4. சிலருக்கு “ஆடிக்கு ஒருதரம் அமாவாசைக்கு ஒரு தரம் வரும்”.

5. என்னிடம் வைத்தியத்துக்கு வந்த ஒருவருக்கு ஐந்து நாளைக்கு ஒருதரம் தான் மலம் வருமாம்.

6. சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் உடனே மலம் கழிக்க வேண்டிய நிலை வரும்.

இன்னும் பல வகையான மலச்சிக்கல் உள்ளது.

இப்படி உடலின் உள்ளே நாம் அனுப்பும் உணவுகளின் கழிவுகள் வெளியேற முடியாத போது, கழிவுகள் உடலின் உள்ளேயே தங்கிவிடுகின்றன. இப்படி உடலில் தேங்கும் கழிவுகள், தேங்கும் உறுப்புகளில் தொந்தரவுகளையும் நோய்களையும் உருவாக்குகின்றன.

இப்படிப் பல வகையான மலச்சிக்கலால் மக்கள் அவதியுற என்ன காரணம்?.

1. மலம் கழிப்பதில் தொந்தரவுகள் வருவதற்கு முதல் முக்கிய காரணம், செரிமான கோளாறுதான்.

2. செரிமானம் சீர்கேடு அடைய முதல் முக்கியமான காரணம், பசியின்றி உண்பதுதான்.

3. செரிமானம் முறையாக நடக்காதது ஏன் என்ற முந்தைய கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன், அதை படித்துப் பாருங்கள்.

4. அதிகமாகக் காரமான உணவுகள் சாப்பிடுவது.

5. இரவில் தாமதமாக சாப்பிடுவது.

6. இரவில் விழித்திருப்பது, தாமதமாக உறங்கச் செல்வது, இரவு வேலை செய்வது.

7. இரவு மிகக் குளிர்ந்த அறையில் தூங்குவது.

8. மன நிம்மதி அற்று இருப்பது.

9. காலையில் தாமதமாக எழுந்திருப்பது

10. இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவது

இப்படி காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மலச்சிக்கலுக்கான தீர்வைப் பார்ப்போம்.

 

மலச்சிக்கலுக்கான தீர்வு

1. பசியின்றி சாப்பிட வேண்டாம். கடிகாரத்தைப் பார்க்காமல், உங்கள் வயிற்றைக் கேட்டு சாப்பிடுங்கள்

2. சாப்பாட்டை நன்றாக மென்று, ரசித்து, ருசித்து, அமைதியாகச் சாப்பிடுங்கள்.

3. தண்ணீர் அளவோடு அருந்துங்கள், தாகமின்றி தண்ணீர் வேண்டாம்.

4. இரசாயனம் கலந்த, உணவு, பானம், மருந்துகள் வேண்டாம்.

5. இரவில் சமைத்த உணவைச் சாப்பிடாமல் பழங்களை மட்டும் சாப்பிடுங்கள்.

6. இரவில் சாப்பிட வேண்டிய சூழ்நிலை வந்தால் 7 மணிக்குள் சாப்பிடுங்கள்.

7. இரவில் 9 மணிக்குப் படுக்கைக்கு செல்லுங்கள்.

8. மைதாவில் செய்த உணவுகளை தவிர்த்திடுங்கள்.

9. பாக்கெட் பால், நெய், மோர், தயிர், வெண்ணெய் குறைத்திடுங்கள்.

10. காலையில் சீக்கிரமாக எழுந்திருங்கள்.

11. வேலைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக எழுந்திருங்கள்

12. பிராணாயாமம், தியானம் செய்யுங்கள், 5 நிமிடம் போதும்.

13. மனதைப் பயம், கவலை, துக்கம், ஏக்கம், கர்வமின்றி அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

 

மலச்சிக்கல் தொந்தரவு உள்ளவர்களுக்கு

1. காலையில் 2 கப் வெந்நீர் அருந்துங்கள், குடித்து 15 நிமிடம் கழித்து, கழிப்பறைக்குச் செல்லுங்கள்.

2. கழிப்பறையில் சென்று அவசரப்படாதீர்கள், அமைதியாகவும் அமர்த்திருங்கள், அது தானாய் வரும்.

3. முக்குவது, வயிற்று அமுக்குவது, அவசரப்படுவது எதுவும் செய்யாதீர்கள். அது தானாய் தான் வரும். நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

4. பொறுமையாகக் காத்திருந்தால் கண்டிப்பாக மலம் வரும், ஒரு இரு நாளைக்கு வராவிட்டாலும், அடுத்த நாள் நிச்சயம் வரும்.

5. கழிப்பறை செல்லும் நேரத்தை, ஒரே நேரமாக, ஒரே இடமாக வைத்துக்கொண்டால், உடல் சுலபமாக பழகிவிடும்.

6. உடல் பழகிவிட்டால், அந்த நேரம் வந்ததும், அந்த இடம் வந்ததும் மலம் கழிக்கத் தோன்றும்.

7. மலம் கழிக்க வேண்டி எந்த மருந்து மாத்திரையும் சாப்பிடாதீர்கள், உடல் பழகிவிட்டால், பின்பு மாத்திரை இல்லாமல் மலம் வராது.

8. நான் இரண்டு நாளை மலம் கழிக்க வில்லை, என்பது போன்ற பயத்தை மனதில் விதைக்காதீர்கள், வயிற்றின் உள்ளே சென்ற அனைத்தும் வெளியே வந்தே தீரும்.

9. அது எப்ப வரும் எப்படி வருமென்று யாருக்கும் தெரியாது, ஆனால் வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பா வரும்.