மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுதான் மனிதனின் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது. எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாதவருக்கும் செரிமான கோளாறோ மலச்சிக்கலோ உண்டானால் போதும் அனைத்து நோய்களும் அலையா விருந்தாளியாகத் தானாய் பின் தொடரும்.

இத்தைதான் திருவள்ளுவர் “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்” என்றார். இந்த குறளின் விளக்கம் “இதற்கு முன்வேளையில் உண்ட உணவு முழுதாக செரித்து விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்கு தக்க உணவு உண்டால். இந்த உடலைப் பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது”.

மருந்து என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது இன்று மக்கள் பயன்படுத்தும் இரசாயனத்திலிருந்து செய்யப்படும் ஆங்கில மருந்துகளை அல்ல. மனிதர்களுக்கு எந்த தீங்கையும் விளைவிக்காத மூலிகைகளை. உண்டது செரித்து, பசி உண்டான பின் உணவு உட்கொண்டால் எந்த நோயும் உண்டாகாது அதனால் எந்த மருந்தும் தேவைப்படாது என்கிறார் திருவள்ளுவர்.

செரிமான கோளாறும் மலச்சிக்கலும்

செரிமான கோளாறும் மலச்சிக்கலும் எப்படி நோய்களை உண்டாக்கும் என்பதைப் பார்ப்போம். அதற்கு முன்பாக உண்ட உணவு உடலின் உள்ளே என்ன செய்கிறது என்பதைச் சற்று பார்ப்போம்.

ஒரு மனிதனுக்கு உடலில் சத்துக்கள் குறையும்போது, சத்துகள் உற்பத்தி செய்வதற்காக உடல் உணவைக் கேட்கும். பசி என்ற உணர்வு உண்டாகும். பசி உண்டான பின்பு உண்ட உணவை ஜீரணிப்பதற்குத் தேவையான சுரப்பிகள் முழுமையாகச் சுரக்கும். பசி வந்து தேவையான சுரப்பிகள் எல்லாம் சுரந்த பின்பு, உணவை முறையாக மென்று உமிழ்நீர் கலந்து விழுங்கும் போது, உண்ட உணவு முழுதாக செரித்து உடலுக்குத் தேவையான முழு சத்தாக மாறும். செரிமானத்துக்குப் பின்பு உணவின் கழிவுகள் எந்த தேக்கமுமின்றி முழுதாக வெளியேறும். இதுதான் உட்கொள்ளும் உணவின் சுழற்சி.

செரிமானம் முறையாக நடைபெறும் பட்சத்தில், உடலுக்குத் தேவையான சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். கழிவுகளும் எந்த தேக்கமுமின்றி எளிதாக வெளியேறும். கழிவுகள் இல்லாத உடலில் தேவையான சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும் போது உடல் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருக்கும். இறுதிவரையில் எந்த நோயும் உண்டாகாது.

செரிமான கோளாறும் மலச்சிக்கலும் எப்படி நோய்களை உண்டாக்கும் என்பதை பார்ப்போம்.

பசியில்லாத போது உணவு உட்கொண்டால், உணவைச் செரிப்பதற்கான சுரப்பிகள் சுரக்காது. பசியில்லாமல் உண்ட உணவு வயிற்றிலேயே அதிக நேரம் கிடக்கும். வயிற்றில் கிடக்கும் உணவு அழுக தொடங்கும். அந்த அழுகிப்போன உணவிலிருந்து உண்டாகும் வேதி பொருட்களும் இரசாயனங்களும் உடலிலேயே தேங்க தொடங்கும். அந்த இரசாயனங்கள் தேங்கும் உறுப்புகளைக் கெடுத்து, அந்த உறுப்புகளின் செயல் திறனை பாதித்து நோய்களை உண்டாக்கும். பசியின் அளவுக்கு மிகுதியாக உணவு உண்டாலும் இந்த பாதிப்பு வர வாய்ப்புகள் உண்டு.

மலம் என்பதே, ஜீரணமான உணவின் கழிவுகள்தான். உண்ட உணவு ஜீரணமாகாத போது மலமும் முழுதாக வெளியேறாது. மலம் குடலிலேயே தேங்கத் தொடங்கும். குடலில் தேங்க தொடங்கும் மலம், உடலில் நோய்களை உண்டாக்கும்.

உடலில் தேங்கும் கழிவுகள் இந்த குறிப்பிட்ட உருப்பில்தான் நோய்களை உண்டாகும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. கால் பாதம் முதல் தலை வரையில் அந்த கழிவு இரத்தம் மூலமாக உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவலாம். உடலில் எங்கு வேண்டுமானாலும் நோய்களை உண்டாக்கலாம். சேர்ந்த கழிவுகளின் வீரியத்துக்கு ஏற்ப நோயின் தன்மை இருக்கும்.

குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்கள்

இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகளுக்கு நோய்கள் உண்டாவதற்கு, பசியில்லாமல் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவுகள் தான் காரணம். பசி உண்டாகி உணவு கேட்கும் வரையில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்காதீர்கள். உணவை நன்றாக மென்று விழுங்கச் சொல்லுங்கள். இன்று பசியில்லாமல் அவர்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் பிற்காலத்தில் அவர்கள் நோயாளிகளாக மாற காரணமாக இருக்கும்.

இதற்கும் முன்பு வேலை உண்ட உணவு முழுதாக ஜீரணமானால்தான், மறுபடியும் பசி உண்டாகும். பலருக்கு மலக்குடலில் மலம் தேங்கி இருப்பதாலும், வயிற்றில் ஜீரணமாகாத உணவு கிடப்பதாலும் பசி உண்டாவதில்லை. பசி இல்லையென்றால் வயிற்றிலோ குடலிலோ கழிவு தேங்கி இருக்கிறது என்பதை உணராமல், மறுபடியும் மறுபடியும் பசியில்லாமல் உணவை உட்கொள்வதுதான் பல நோய்கள் உண்டாகக் காரணமாக இருக்கிறது.

நன்றாகப் பசி வந்த பின்பு உணவு உட்கொள்ளும் பழக்கத்தையும், மலம் வெளியேறும் வரையில் உணவு உட்கொள்ளாமல் இருக்கும் வழக்கத்தையும் உண்டாக்கிக் கொள்ளுங்கள். உடலில் எந்த நோயும் உண்டாகாது, ஒரு வேலை இப்போது ஏதாவது நோய்கள் இருந்தாலும் படிப்படியாக குணமாகும்.