தூக்கம் பற்றிய முத்தையா கட்டுரையை படிக்காதவர்கள் அதைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.

கார் ஓட்டும் பழக்கம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரவில் கார் ஓட்டும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது நன்றாக புரியும். இரவில் நீங்கள் வெகுநேரம் வாகனம் ஓட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். வாகனம் ஓட்டும் போது, தூங்க வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ நிற்சயம் இருக்கப்போவதில்லை. போக வேண்டிய இடத்துக்குப் பாதுகாப்பாக போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும், அப்படி இருக்கும் போது, வாகனம் ஓட்டும் போது ஏன் தூக்கம் வருகிறது?.

கார் மட்டுமல்ல, லாரி, பஸ், ஆடோ, அவ்வளவு ஏன் பைக் ஓட்டும் போது தூங்கி விபத்துக்கு உள்ளானவர்களை கூட நான் பார்த்திருக்கிறேன். கார் சத்தமின்றி அமைதியாக இருக்கும் அதனால் தூங்கி விடுகிறார்கள் என்றால் பைக் ஓட்டுபவர்கள் ஏன் தூங்குகிறார்கள்?. பைக் சத்தம், மற்ற வாகன சத்தம், காற்று அழுத்தம் அனைத்தையும் மீறி எப்படித் தூங்குகிறார்கள்?.

 

இதற்குக் காரணம் தூக்கம் நாம் ஆசைப்படும் பொழுது வருவதில்லை, மாறாக நமக்குத் தேவைப்படும் போது வரும். நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அது எவ்வளவு முக்கியமாக வேலையாக இருந்தாலும் கவலையில்லை, உடலில் சக்தி தட்டுப்பாடு ஏற்பட்டால், தூக்கம் தானாய் வரும். யாருடைய அனுமதியும் கோரி நிற்காது. அதை மீறித் தூக்கத்தை நீங்கள் கட்டுப்படுத்த முயற்சி செய்தால் உங்களை அறியாமலேயே தூங்கி விடுவீர்கள்.

குழந்தைகளைக் கொஞ்சம் கவனித்தால் புரியும். அவர்கள் சாப்பிடுவது, விளையாடுவது என்று என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் தூக்கம் வந்தால் அப்படியே தூங்கி விடுவார்கள். சில தாய்மார்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்கிறேன் என்ற பெயரில், குழந்தைகளை வற்புறுத்தித் தூங்க வைப்பார்கள். ஆனால் குழந்தைகள் தூங்காமல் அடம்பிடிப்பார்கள். சில தாய்மார்கள் தூக்கத்தை மீறி படிக்க சொல்வார்கள். இரண்டுமே தவறான அணுகுமுறை.

குழந்தைகளை நீங்கள் பார்த்தீர்களே ஆனால் புரியும், அவர்கள் உடலை எதிர்த்து எந்த வேலையையும் செய்ய மாட்டார்கள். உடல் என்ன சொல்கிறதோ கட்டுப்படுவார்கள், காரணம் அவர்கள் இயற்கையோடு இணைந்து இருக்கிறார்கள், பெரியவர்கள் ஆக ஆக இயற்கையை விட்டு விலகி வருவதால், உடல் என்ன சொல்கிறது என்று பலருக்கு விளங்குவதில்லை. உடலின் பாசை புரியாமல், உடலை எதிர்த்துச் செயல்பட்டு, நோய்வாய் படுகிறார்கள்.

தூக்கம் நம் இஷ்டத்துக்கு வராது

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் புரிந்துகொள்ளுங்கள். இன்று பலர் எனக்குச் சரியான தூக்கம் இல்லை, தூக்கம் இல்லாமல் அவதிப் படுகிறேன் என்றார் கூறுவதற்கு காரணம் அவர்கள் தங்களை, தங்கள் சுற்றி இருப்பவர்களுடன் இணைத்துப் பார்க்கிறார்கள். தன் கூட இருப்பவர்கள் 10 மணி நேரம் தூங்கினால், தானும் 10 மணி நேரம் தூங்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். அது முடியாத போது தனக்கு நோய் உள்ளதாகக் கற்பனை செய்ய ஆரம்பிக்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கு 5 மணி நேர தூக்கமே போதுமானதாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆசைப் படுகிறார்கள் என்பதற்காக உடல் தூங்காது. உடல் உழைப்புக்கும் சக்தி தேவைக்கும் ஏற்பவே தூக்கத்தின் அளவு இருக்கும்.

உடல் உங்கள் சொல் கேட்டு நடக்காது நீங்கள் தான், உங்கள் உடலின் சொல் கேட்டு நடக்க வேண்டும்.