முதல் பாகத்தில் வலியைப் பற்றியும், வலி உருவாகும் காரணம் பற்றியும், உடலுக்கு வலி ரொம்ப நல்லது என்றும் பார்த்தோம். இரண்டாம் பாகத்தில் வலியைப்பற்றி இன்னும் கொஞ்சம் ஆராய்வோம்

வலி ஏன் ஏற்படுகிறது? வலி என்பது நோயா?

வலி ஒரு ஊந்து சக்தியாகவும், ஒரு எச்சரிக்கை மணியாகவுமே வேலை செய்கிறது.

தலைவலியைப் பற்றி பார்ப்போம், ஒருவருக்குத் தலைவலி ஏற்பட்டால் என்ன செய்வார்?

– தைலம் தேய்ப்பார்
– மசாஜ் செய்வார்
– வலி மாத்திரை விழுங்குவார்
– காபி குடிப்பார்
– ஏதாவது நாட்டு வைத்தியம் செய்வார்
– தூங்குவார்

தீருமா தலைவலி? இல்லை மறுநாள் மீண்டும் வரும். அது தொடர்ந்து கொண்டே இருக்கும். ஏன்? இத்தனை செய்தும் ஏன் வலி தீரவில்லை?.

– வருடக் கணக்கில் தலைவலியுடன் அவதியுறுபவர்கள் இருக்கிறார்கள்.

– குறிப்பிட்ட நேரத்தில் தலைவலி வந்து அவதியுறுபவர்கள் இருக்கிறார்கள்.

– குறிப்பிட்ட சீதோஷனையில் தலைவலி வந்து அவதியுறுபவர்கள்.

– குறிப்பிட்ட உணவுக்குப் பின் தலைவலி வந்து அவதியுறுபவர்கள் இருக்கிறார்கள்.

– குறிப்பிட்ட பருவகாலத்தில் தலைவலி வந்து அவதியுறுபவர்கள் இருக்கிறார்கள்.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இத்தனை மருத்துவ வசதிகள் இருந்தும் ஏன் இதற்கான தீர்வை யாரும்  கண்டுபிடிக்கவில்லை?. காரணம் அனைவரும் தலையையே நோண்டிக்கொண்டிருக்கிறார்கள். நோய்க்கான மூல காரணம் யாருக்கும் தெரியவில்லை.

ஒரு திருட்டு நடந்தால், திருடன் எங்கிருந்து, எப்படி வந்திருப்பான், எங்குப் போயிருப்பான், என்று தேடினால் தானே கண்டுபிடிக்கலாம், அதை விட்டு திருட்டு நடந்த வீட்டையே சுற்றி சுற்றி வந்து என்ன பயன்?.

இந்த தவற்றைத்தான் அனைவரும் செய்கிறோம். தலைவலி இருக்கும் இடத்தில் நோயில்லை, நோய் தலையில் இல்லை!. வலி இருக்கும் இடத்தில் தான் நோயிருக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.

வலி வெறும் அபாயமணி அவ்வளவுதான். வலி நோயில்லை, வலியின் காரணத்தை, பாதிக்கப்பட்டவர் கூறும் அறிகுறிகள் கொண்டோ, நாடி பரிசோதனை மூலமோ, உடலின் அறிகுறிகள் மூலமோ கண்டுபிடிக்கப்பட்ட வெண்டும். அப்படி கண்டுபிடிப்பவன் மட்டுமே உண்மையான மருத்துவன்.

தலைவலிக்கான சில காரணங்களைப் பார்ப்போம்.

– மலச்சிக்கல்
– நீர் பற்றாக்குறை
– இரத்தத்தில் அழுக்கு
– உடல் கழிவுகள்
– உடல் உஷ்ணம் அதிகரித்தல்
– உடல் உறுப்புக்கள் சக்தி குறைவு
– மனச் சோர்வு / கவலை
– மன அழுத்தம்

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இது எதுவும் அறியாமல், தலைக்கு மட்டும் மருத்துவம் பார்க்கும் முட்டாள்கள், நோயைத் தீவிரமாக்கி தீராத தலைவலியாக, தீவிர நோயாக மாற்றிவிடுகிறார்கள்.

இது எல்லா வகையான வலிக்கும் பொருந்து. ஒரு உதாரணம் பார்ப்போம்.

காது வலிக்கிறது, அல்லது குடைகிறது, அல்லது சத்தம் கேட்கிறது, அல்லது கட்டிவருகிறது, அல்லது காது கேட்கும் திறன் குறைகிறது. இப்போது கூறுங்கள், பாதிப்பு உடலின் எந்த பாகத்தில்?

தொடர்ந்து படிக்கும் முன் கொஞ்சம் சிந்தியுங்கள்.

நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது, பலர் காதுதான் என்பீர்கள். ஆனால் உண்மையில் சிறுநீரகத்திலோ அல்லது நுரையீரலிலோ சக்தி குறைபாடு ஏற்பட்டிருக்கிறது.

சக்தி குறைபாடு ஏற்பட்ட சிறுநீரகம் அல்லது நுரையீரலைச் சரி செய்யாமல் காதையே நோண்டிக்கொண்டு இருந்தால், நோய் முற்றி உறுப்பையே சிதைத்துவிடும்.

மறுபடியும் சொல்கிறேன், வலி இருக்கும் இடத்தில் தான் நோயிருக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.

இது என்னடா புது குழப்பம் என்பவர்கள் பொறுத்திருங்கள். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் வரும்.