மனித வாழ்கையில் ஏதாவது எதிர்பாராத விசயம் நடந்தாலோ, தன் புரிதலுக்கு மீறிய விஷயங்கள் நடந்தாலோ, தவறான கணவன் மனைவி அமைந்தாலோ, பிள்ளைகள் தவறான விசயங்களைச் செய்தாலோ, பிடிக்காத விசயம் ஏதாவது நடந்தாலோ அல்லது குணப்படுத்த தெரியாத நோய்கள் வந்தாலோ, அதைத் தலைவிதி என்று சொல்லி ஏற்றுக்கொள்ளும் வழக்கம் மக்களிடத்தில் இருக்கிறது. விதி, தலைவிதி, தலை எழுத்து இப்படி ஏதாவது சொல்லி மனதை சமாதானப் படுத்துவார்கள். உண்மையில் விதி என்பது என்ன?.

தலைநகரம் என்று அழைக்கிறோமே அது என்ன தலைக்கு மேலா இருக்கிறது?. தலைமகன் என்று அழைக்கிறோமே அவன் என்ன தலைக்கு மேலா இருக்கிறான்?, அல்லது தலையால் பிறந்தானா?. இல்லையல்லவா!, அதைப்போல் தான் தலையெழுத்து என்பதும் மனிதனின் தலையில் எழுதப்பட்ட எழுத்து அல்ல. தலைநகரம், தலைமகன், தலைமை, தலைவன் போன்ற வார்த்தைகளில் வரும் தலை என்ற சொல், முதல், முதன்மை என்ற அர்த்தத்தைத் தான் குறிக்கிறது.

தலையெழுத்து என்பதும் முதன்மையான எழுத்து என்றுதான் குறிக்கிறது. தலையெழுத்து என்பது மனித இனம் உருவாக்கப்படும் முன் எழுதப்பட்ட முதல் எழுத்து அல்லது முதல் விதி என்றுதான் பொருள்கொள்ள வேண்டும்.

மனிதர்கள் கண்டு நடுங்கும், பலர் ஏமாற்றப் பயன்படுத்தும் சொல், பலர் ஏமாறக் காரணமாக இருக்கும் சொல் விதி. விதி என்ற சொல்லை நாம் எங்கு எல்லாம் பயன் படுத்துகிறோம் என்று பார்ப்போம். சாலைவிதி, பிரபஞ்ச விதி, ஈர்புவிதி, ஆகமவிதி, இப்படிப் பல இடங்களில் விதி என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். இப்போது சொல்லுங்கள் விதி என்பது என்ன?.

விதி என்ற சொல் சட்டம் என்றுதானே பொருள் தருகிறது. ஆம், “விதி” என்றாலும் “தலை எழுத்து” என்றாலும், “தலை விதி” என்றாலும் ஒரே அர்த்தம்தாம். நாம் தான் பயத்தால் தவறாக பொருள் கொள்கிறோம். விதி, தலைவிதி, தலையெழுத்து இந்த மூன்று சொல்லுக்கும் முதலில் எழுதப்பட்ட சட்டம் என்றுதான் அர்த்தம்.

மனிதன் எப்படி வாழ வேண்டும். மனித இனம் எப்படி செயல்பட வேண்டும் என்று இந்த உலகத்தில் இயற்கையின் சட்டம் ஒன்று உள்ளது அதைத்தான் இந்த விதி என்ற சொல் குறிக்கிறது. மற்றபடி ஒவ்வொரு மனிதனின் தலையிலும் கடவுள் எதையாவது எழுதி வைத்திருப்பார் என்பது பேதைமையன்றி வேறில்லை. கடவுள் எந்த மனிதனின் வாழ்க்கையிலும் குறுக்கிடமாட்டார். மனிதர்கள் தானாக எதையாவது கற்பனை செய்துகொண்டு இறைவனின் மீது பழியை போடுகிறார்கள்.

விதிக்கு சில உதாரணங்கள் சொல்கிறேன். மிளகாய் காரமாக இருக்கும், தேன் இனிக்கும், உப்பு கரிக்கும், பல் கூர்மையான விலங்குகள் மாமிசம் உண்ணும், பல் தட்டையான விலங்குகள் தாவரங்களை உண்ணும், மீன்கள் நீரில் வாழும், விலங்குகள் தரையில் வாழும், பறவைகள் பறக்கும். இப்படி பல இயற்கையின் படைப்பு விதிகள் இருக்கிறது.

அனைத்து வகை நீரையும் மனிதன் பயன்படுத்தலாம் ஆனால் கடல் நீரைப் பயன்படுத்த முடியாது. சில தாவரங்களை உண்ணலாம் சில வற்றை உண்ணக்கூடாது. இந்த உலகில் சில வேலைகளை மனிதன் செய்யலாம் சிலவற்றைச் செய்ய முடியாது. இப்படி பல கட்டுப்பாட்டு விதிகள் உள்ளது.

மனிதனின் உடலிலேயே உள்ளுறுப்புகளின் மேல் அவனுக்கு எந்த உரிமையும் கிடையாது. மனிதனால் உள்ளுறுப்புகளைக் கட்டுப்படுத்த முடியாது. உடலின் வெளி உருப்புகளில் கூட அவனுக்கு முழு கட்டுப்பாடும் கிடையாது.

இப்படி பல கட்டுப்பாட்டு விதிகள் மனிதனுக்கும் உலகில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. இவற்றைத்தான் நம் முன்னோர்கள் விதி (சட்டம்) என்று அழைத்தார்கள். இப்படி இயற்கை விதித்த சட்டங்களை மீறுவதுதான் மனிதனின் அனைத்துத் துன்பங்களுக்கும் தொந்தரவுகளுக்கும் காரணம்.

விதிமீறல் உதாரணம்
பசித்தால் சாப்பிட வேண்டும், தாகமிருந்தால் தண்ணீர் அருந்த வேண்டும், இது இயற்கையின் சட்டம். இருந்தால் செய்ய வேண்டும் என்றால் இல்லாவிட்டால் செய்ய கூடாது என்பதுதான் சட்டம். பசி இல்லாமல் சாப்பிட கூடாது, தாகமில்லாமல் தண்ணீர் அருந்தக் கூடாது. இந்த உடலின் விதிகளை மீறும்போது உடலில் நோய்கள் உண்டாகிறது. தவறுகள் அனைத்தையும் மனிதர்கள் செய்துவிட்டு உடலில் தொந்தரவு ஏதாவது உருவானால் கடவுள் சோதிக்கிறார் என்றும் எல்லாம் தலைவிதி என்றும் கடவுளின் மீது பழியை போடுவார்கள்.

ஒவ்வொரு எண்ணமும் ஒரு விளைவை உருவாக்கும் என்பது சட்டம். நல்ல எண்ணங்கள் இருப்பவர் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ்வார்கள். தீய எண்ணங்கள் உள்ளவர்கள் மற்றும் தவறான மன பதிவுகள் உள்ளவர்கள் மன நிம்மதி இழந்து வாழ்வார்கள் இது இயற்கையின் சட்டம்.

இப்படி வாழ்கையில் இயற்கை விதித்திருக்கும் சட்டங்களை தான் விதி, தலையெழுத்து மற்றும் தலைவிதி என்று நம் முன்னோர்கள் வகுத்தார்கள். இன்னும் நான் இங்குக் கூறாத பல விதிகள் உள்ளன, இப்படி இயற்கை வகுத்த விதிகளை புரிந்துகொண்டு மனிதன் வாழ வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் மனம் மறிந்து விதிகளை மீறக்கூடாது.

இயற்கையின் விதிகளை மீறுவோருக்கு அதற்கு ஏற்றவாறு விளைவுகள் உருவாகும். இந்தச் சட்டத்தையும் அதன் விளைவுகளையும் கர்மா என்று புத்தர் வகுத்தார். இயற்கையின் விதிகளைப் புரிந்துகொண்ட மனிதனாய் வாழ்வோம்.